You Are Here: Home » Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) » ஈரோடு அருகே கொடுமணலில் பண்டைய காலத் தமிழர்களின் செல்வங்கள் கண்டுபிடிப்பு!

ஈரோடு அருகே கொடுமணலில் பண்டைய காலத் தமிழர்களின் செல்வங்கள் கண்டுபிடிப்பு!

 
ஈரோடு அருகே கொடுமணலில் பண்டைய காலத் தமிழர்களின் செல்வங்கள் கண்டுபிடிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் (கொடுமணலைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு காண்க: http://en.wikipedia.org/wiki/Kodumanal) என்ற ஊர் அள்ள அள்ளக் குறையாத செல்வங்களைக் கொண்டிருக்கிறது.

ஆம்!

புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் புதுப்பிக்கப்பட்ட, சமீபத்திய முறையிலான அகழ்வாராய்ச்சி ஒன்றை நடத்தியது.அதனை முன்னின்று நடத்தியவர்களுக்கு மிகச் சிறந்த செல்வச் செழிப்பான தொல்பொருட்கள் தற்போது கிடைத்துள்ளன.

Kodumanal ( கொடுமணல் )

Kodumanal ( கொடுமணல் )

 

ஆராய்ச்சியின்போது, நான்கு அகழிகளில் வைக்கப்பட்டிருந்த தொல்பொருட்கள், கி.மு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.

அப்பொருட்கள், சிக்கலான தொழில் துறை அமைப்பை வெளிப் படுத்தியுள்ளன. தொழில் பொருட்களான, இரும்பு மற்றும் எஃகு, நெசவு, கல், காமதகம், விலை உயர்ந்த குண்டு மணிகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான வளையல்கள், மாணிக்கம் போன்ற கற்கள், இரத்தின கல் வகைகள், ஓனிக்ஸ், ஐவரி, காணீலியன் மற்றும் கருப்பு-பூனைக் கண் போன்ற விலை மதிப்பிலாத பல பொருட்கள் கிடைத்துள்ளன.

இப்பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பானைகளில் வைக்கப்பட்டிருந்தவை ஆகும். அப்பானைகள், மங்கல் சிவப்பிலான நிறத்தைக் கொண்டவை ஆகும். பருத்தி இழைகள் மற்றும் மெல்லிய தங்கத்தினாலான இழைகளால் நெய்யப்பட்ட மேற்பரப்பை கொண்டிருக்கின்றன. அவற்றில் 30 பானைகள் தமிழ் எழுத்துருவான பிராமி வரி வடிவங்களைக் கொண்டிருக்கின்றன.

Kodumanal1

அவற்றில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் தனிப்பட்ட மனிதர்களுடைய பெயர்கள் ஆகும். அவை ‘சப மகதாய் பம்மதன்’, ‘சாத்தன்’, ‘விசாகி’,’சிலிகன்’, ‘உரணன்’ மற்றும் ‘திசன்’ ஆகியவை.

Kodumanal2

இதில் ஒரு ஆச்சரியப்படத்தக்க விடயம் என்னவென்றால், பெரிய பானை ஒன்றில் தெளிவாகத் தெரியும் வகையில், ‘சம்பன் சுமணன்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

பெயர் எழுதியிருக்கும் வரி வடிவமானது, தற்போது நடைமுறையில் இருக்கும் ‘தமிழ்-பிராமி’ எழுத்துரு வடிவமாகும். (பிராமி எழுத்துருவைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு: பிராமி_எழுத்துமுறை)

இவ்வகழ்வாராய்ச்சியின் இயக்குனரான கே.இராஜன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசியர் ஆவார். அவர் தரும் தகவல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றது.

campan Sumanan

“இதில் ஒரு சிறப்பம்சம் என்வென்றால் கொடுமணல், முழுமையான தொழில் நகரமாக இருந்திருக்க வேண்டும். இப்பகுதியில், குறிப்பிடத்தக்க அளவு கூட இல்லாத, மிகச்சிறிய அளவே விவசாயம் நடந்திருப்பதாகத் தெரிகிறது. இது மாதிரியான தொழில்துறை வளம் மிகுந்த பகுதிகளில் இவ்வளவு ஆவணங்கள் இதற்கு முன்பு கிடைத்ததில்லை” என்கிறார். மேலும் கூறும்போது, “இதற்கு முன்பு பெரிய அளவில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட தமிழ் சங்கப் பகுதிகளாக விளங்கிய கொற்கை, பூம்புகார், கரூர், உறையூர், அழகன்குளம் மற்றும் பொருந்தல் போன்ற பகுதிகளில் கூட பெரிய அளவில் தமிழ்-பிராமி எழுத்துருக்களைக் கொண்ட பானைகள் காணப்படவில்லை” என்றார்.

Kodumanal3

‘சம்பன்-சுமணன்’ என எழுதப்பட்டிருக்கும் பெரிய பானை, கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அப்பானை, நான்கு அகழிகளின் நடுவில் இரண்டாம் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில பானைகளில், ‘சம்பன்’ என்றோ அல்லது, ‘சுமணன்’ என்று மட்டும் எழுதப்படிருந்தது.

‘சம்பன்’ என்பது தந்தையின் பெயராகவும், ‘சுமணன்’ என்பது மகனைக் குறிப்பதாகவும் இருக்கலாம் என்கிறது ஆய்வு செய்த குழு.

எனவே, இத்தொழிற்பகுதி சம்பனுடைய குடும்பத்திற்கு சொந்தமானதாக இருந்திருக்கலாம்.

Kodumanal4

டாக்டர்.இராஜன் மற்றும் அவரது குழுவினர் மேலும் தோண்டியபோது, பழங்காலத்தில் புனித பொருட்களை வைக்கும் கல்லால் செய்யப்பட்ட பெட்டியும், கல்லறை போன்ற அமைப்பினையும் கண்டுபிடித்துள்ளனர். இப்பெட்டிகள் கிரானைட் கற்களால் செய்யப்பட்டவை. கற்களால் ஆன மூடிகளைக் கொண்டுள்ளன. மேலும் கிடைத்த சில பெட்டிகளில், உடைந்த எழும்புத் துண்டுகள் இருந்தன. இறுதி ஊர்வலத்தில் பயன்படுத்தும் பொருட்களாக, நான்கு ஜாடிகள்,மோதிரம் மற்றும் சிதைந்த காணீலியன் மணிகள் கிடைத்தன.

புனித பொருட்களை வைக்கும் பெட்டியில் வரையப்பட்டிருக்கும் அம்புக்குறிக்கான அர்த்தம் தெரியவில்லை.மேலும், அப்பெட்டிகளில் கற்று புகும் அளவிற்கு சிறு துளைகள் இடப்பட்டிருந்தன.

Kodumanal5

தொழிற்பகுதியில் தண்ணீர் உபயோகத்திற்கான வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருக்கின்றன. அவை, இரத்தினக்கற்கள், சிறுமணிகள், நீலக்கல், காமேதகம் ஆகியவற்றை தயார் செய்ய பயன்படுத்தியிருக்க வேண்டும்.

நீலக்கல், சிவன்மலை மற்றும் பெருமாள் மலையில் இருந்தும், கடல் நீர் வண்ணக் கல்லானது, பாடியூரில் இருந்தும், இரும்புத்தாது வெண்ணி மலையிலிருந்தும் வரவழைக்கப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இப்பகுதிகள், கடுமாணலில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருப்பவை

Kodumanal6

மேலும் சில கற்கள், மகாராஸ்டிராவில் இருந்தும், ஆப்கானிஸ்தானில் இருந்தும் கொண்டு வரப்பட்டவை ஆகும். கொடுமணலில் அழகிய மணிகள் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின.

தஞ்சாவூரை சேர்ந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இதுவரை, 48 அகழிகள் மற்றும் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் 1985, 1986, 1989, 1990 ஆகிய ஆண்டுகளில் படிப்படியாக நடத்தப்பட்டது. தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் 1998 மற்றும் 1999 இல் மேலும் 15 அகழிகளைக் கண்டுபிடித்தது.

Kodumanal7

இராஜன் பேசும்போது, “கொடுமணலில் நடத்தப்பட்ட ஆய்வு, தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வாகும். இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவிலான அகழிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதேயில்லை. வெவ்வேறு வகையான கல்லறைகள், வெவ்வேறு இன மக்கள் கூட்டாக வாழ்ந்ததை பிரதிபலிக்கின்றன. மேலும், ‘திசான்’, ‘விசாகி’ போன்ற பிராகிருத மொழிச் சொற்கள் தமிழ்-பிராமி எழுத்துருக்களில் பொறிக்கப்பட்டிருப்பது அக்காலத் தமிழர்கள் வடஇந்தியர்களுடன் கலாசார மற்றும் தொழில்ரீதியான தொடர்புகளை கொண்டிருந்தமையை நமக்கு அறிவுறுத்துகிறது” என்றார்.

Kodumanal8

கொடுமணலில் நடத்தப்பட்ட மேற்கண்ட ஆய்வு தமிழுக்கும், தமிழர்களுக்கும் மேலும் சிறப்பு சேர்ப்பதாய் உள்ளதுதானே?

இதுபோன்ற ஆய்வுகள் தமிழக அரசால் பெரிய அளவில் முன்னின்று நடத்தப்பட்டால் சங்க கால தமிழ் மக்களின் வளமான வாழ்க்கை உலகமறிய வெளிச்சத்துக்கு வரும் என்பதே அலை செய்திகளின் கருத்தாகும்.

 

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top