You Are Here: Home » Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) » உங்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும் உழைப்புனா என்னன்னு?

உங்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும் உழைப்புனா என்னன்னு?

 
உங்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும் உழைப்புனா என்னன்னு?

Pandiyan
சுட்டெரிக்கும் பகல் 12 மணியின் போது தஞ்சாவூர் கடைத்தெரு வழியாக, ஒரு பெரியவர் வெயிலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தலையில் ஒரு துண்டோ அல்லது தொப்பியோ கூட அணியாமல் சைக்கிளில் போளி வியாபாரம் செய்தபடி சென்று கொண்டிருந்தார்.
அவரைப்பார்த்த மாத்திரத்திலேயே, அவருக்கு பின்னால் ஒரு சுவராசியமான தகவல் இருக்கும் என்று மனதில் பட, அதற்கான தேடலை தொடங்கினார்.
57 வருடங்களாக தெருவில் போளி வியாபாரம் செய்தே பத்து வீடு வாங்கி, தனது ஏழு பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்த அந்த பெரியவரைப் பற்றி சுருக்கமான கதை இது.
விருதுநகரைச் சேர்ந்த பாண்டிக்கு இப்போது 76 வயதாகிறது. மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிப்பு ஏறவில்லை, பதிலுக்கு இவரது அப்பாவிடம் இருந்து போளி போடும் வித்தையை தனது 12 வயதிலேயே கற்றுக்கொண்டவர், தனியாகவே பிழைத்துக் கொள்ளும் நோக்குடன் விருதுநகரில் இருந்து தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்தார்.
சுவையாக இவர் தயார் செய்யும் போளிக்கு தஞ்சாவூர் மக்கள் நல்ல வரவேற்பு தரவே இங்கேயே தங்கிவிட்டார். 25 வயதில் செல்லபாக்கியம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பையன்கள், நான்கு பெண்கள்.
அதிகாலையில் தயார் செய்யும் போளியை கண்ணாடி பெட்டியில் அடுக்கிக்கொண்டு தலைச் சுமையாக (சமீப நாட்களாகத்தான் சைக்கிள்) விற்பனைக்கு கிளம்பிவிடுவார். கடுமையான உழைப்பாளி ஆனால் அதே நேரம் அதிகம் ஆசைப்படாதவர். ஒரு நாளைக்கு இரண்டு தெருக்களில் இரண்டு மணி நேரம் மட்டுமே தலைச்சுமையாக விற்கும் அளவிற்குதான் போளிகள் தயார் செய்வார், அது விற்று முடித்ததும் வீட்டிற்கு திரும்பிவிடுவார். பெரிதாக ஆர்டர் கிடைத்தாலும் வேண்டாம். இதில் கிடைக்கும் வருமானமே போதும் என்று இருந்தவர், இருப்பவர்.
கிடைத்த வருமானத்தை சிறுகச் சிறுகச் சேர்த்து தான் குடியிருந்த தெருவில் இருந்த லயன் வீடுகள் என்று சொல்லப்படும் வரிசையாக அமைந்த பத்து சின்ன, சின்ன வீடுகளை ஒன்று, ஒன்றாக விலைக்கு வாங்கினார்.
தன்னுடைய பிள்ளைகளை படிக்க விரும்பினால் படிக்க வைத்தார், படிக்காத பிள்ளைகளை வியாபாரம் செய்ய வைத்தார், பெண் குழந்தைகளை திருமணம் செய்துவைத்தார். அந்த வகையில் பிள்ளைகள் அனைவரையும் நல்லபடியாக கரைசேர்ப்பதற்காக, அனைத்து வீடுகளையும் விற்றவர், தற்போது குடியிருப்பது பஞ்சசவர்ணம் காலனி,அல்லாகோயில் சந்தில் உள்ள ஐநூறு சதுரஅடியில் அமைந்த வாடகை வீட்டில்தான்.
ஒரு பிள்ளை என்ஜினியர் மற்ற பிள்ளைகள் மளிகை கடை வியாபாரம், பெண் பிள்ளைகள் நல்லபடியாக அவரவர் குடும்பத்துடன் பல்வேறு ஊர்களில் வாழ்கின்றனர், 22 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இவ்வளவு பேர் இருந்தாலும் யாரையும் சிரமப்படுத்த விரும்பாமல், எவருடைய உதவியையும் எதிர்பாராமல், திருமணமான புதிதில் எப்படி வாழ்க்கையை துவங்கினாரோ, அதே போல தற்போது இவரும் இவரது மனைவியும் மட்டும் போளி வியாபாரம் செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியோடு நடத்திக் கொண்டுள்ளனர். இவரது குடும்பத்தில் இவரைத் தவிர யாரும் இந்த போளி வியாபாரம் பக்கம் திரும்பவில்லை, அதைப்பற்றி இவருக்கு கவலையும் இல்லை, அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பது இவரது கொள்கை.
மழை, வெயில், காற்று என்று எதுவும் இவரது போளி வியாபாரத்தை பாதித்தது இல்லை. வாரத்தில் ஏழு நாள், வருடத்தில் 365 நாளும் இவரது போளி வியாபாரம் உண்டு. ஒரு நாளைக்கு சராசரியாக 900 ரூபாய்க்கு போளி வியாபாரம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் ஒரு போளி காலணாவிற்கு விற்றவர், தற்போது பத்து ரூபாய்க்கு மூன்று என்று விற்கிறார்.
தினமும் பசியோடு எதிர்படும் ஓருவருக்கு இரண்டு போளிகள் இலவசமாக கொடுப்பதையும், கர்ப்பினி பெண்கள், ஏழைக்குழந்தைகள் என்றால் விலையில் சலுகைகாட்டுவதையும் அன்றாட வழக்கமாக கொண்டுள்ளார்.
எதைப்பற்றியும் கவலை இல்லை, யாரையும் சார்ந்து இல்லை, யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதும் இல்லை, தன் உழைப்பை மட்டுமே நம்பி மகிழ்வுடனும், திருப்தியுடனும் வாழும் இவரைப் போன்றவர்கள் பலருக்கு உதாரணமானவர்களே.

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top