கோயிலின் அழகு

 
527817_624110707603783_591981946_n

மேலைச் சாளுக்கிய மன்னன் தம் எதிரியான பல்லவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்க காஞ்சி மீது பெரும் படையுடன் வருகிறான், சண்டையிட வந்தவன் இந்த கோயிலின் அழகை கண்டு பிரம்மித்துப் போய், இதன் அழகில் மயங்கி, ” இது காப்பாற்றப்பட வேண்டியது ” என்று கூறிவிட்டு, இந்த கோயிலுக்காக பொன்னையும், பொருளையும் வாரி வழங்கிவிட்டுச் செல்கிறான், வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு இதுவே முதல் முறை, அநேகமாக இதுவே கடைசியாகவும் இருக்கக்கூடும். தென் கிழக்கு ஆசிய கண்டத்திலேயே இது போன்ற அழகான கட்டிடம் இன்று வரை கட்டப்படவில்லை.

எதை வர்ணிப்பது? எப்படி வர்ணிப்பது? சுவரோவியங்களையா? சிற்பங்களையா? கட்டிடக்கலையா? செந்தமிழில் கூட சொற்கள் கிடைக்காமல் போகுமே! கோயிலை எத்தனை சுற்று சுற்றியிருப்பேன், தெரியாது, ஆனால் கடவுளை மட்டும் வணங்க வந்தவர்கள் சுற்றியதை விட அதிகமென்பது மட்டும் தெரியும். சுற்றி வரும்போதெல்லாம் மனதிற்குள் ஒரே ஒரு கேள்வி, இவற்றை மனிதர்கள் தான் செய்திருப்பார்களா!!

ஆங்காங்கே சிதிலமடைந்து கிடந்த நிறம் மாறாத ஓவியங்கள் சிரித்துக்கொண்டே கேட்டது, நீங்கள் இன்றைக்கு 10 வருடம் தானே வண்ணத்திற்கு உத்தரவாதம் தருகிறீர்கள்? எனக்கு என்ன வயது தெரியுமா? என் மீது வண்ணம் தீட்டப்பட்டு 1300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றதும் தலை குனிந்தபடியே அடுத்த இடத்திற்கு நகர்ந்துவிட்டேன். பின்னர் தான் தெரிய வந்தது, வாசல் தொடங்கி, வானுயர கோபுரம் வரை இந்த கோயிலில் இருந்த சிற்பங்கள் முழுக்க ஒரு இடம் விடாமல் அன்றைக்கு வண்ணம் தீட்டி இருகிறார்கள், கட்டி முடித்த பின், எப்படி இருந்திருக்கும், கற்பனை செய்து பார்த்தேன், உடல் சிலிர்த்தது!.

அதோ சுவரின் மேல் அந்தரத்தில் அங்கே ஒரு யானைக்குட்டி! என்னையும் படம் எடுத்துக்கொள்ளுங்கள் நானும் அழகு தான் என்றது, சுவரின் மேல் உட்கார்ந்த படி 1300 ஆண்டுகளாக எத்தனை மழை, எத்தனை வெயில், எத்தனை புயல். எத்தனை பனி காலங்களை பார்த்திருக்கும்!! நீ அழகுதானடா.
நாங்கள் ஆடுவதை நீங்களாவது நின்று கவனிக்கிறீர்களா? என்று கேட்டபடி ஒவ்வொரு பூதகணமும் ஒவ்வொரு வடிவங்களில் கை கால்களை ஆட்டிக்கொண்டு முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டிருந்தன, அவை செய்யும் சேட்டைகளை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் தனியாக சிரித்துக்கொண்டிருந்தேன், உடன் வந்திருந்த நண்பர் சிலை என்பதையும் மறந்து கீழிருந்த நந்தியை கட்டிக்கொண்டு முத்தமிட்டார், பார்த்து விட்டேன், என்ன செய்வதென்று தெரியாமல் என்னை பார்த்து சிரித்தார். அப்படியே நந்தியை கட்டிக்கொண்டவாறு ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.

“ராஜ ராஜ சோழன்” இந்த கோயிலை பார்த்து விட்டு “கச்சிபட்டு பெரிய திருக்கற்றளி” என்று பெருமையுடன் கூறினாராம், காஞ்சியின் பழைய பெயர் “கச்சி”, இதை பார்த்து தான் தன் நாட்டிலும் இது போன்ற அழகான ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கட்டியது தான் “தஞ்சை பெரிய கோயில்” என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

“இரண்டாம் நரசிம்ம வர்மர்” மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது. நாம் கட்டும் இறைக்கோயில் அதிக வருடம் நிலைக்க வேண்டும், அப்படியானால் எதில் கட்டுவது, அதில் வழக்கமாக இருக்கும் “மரம், செங்கல்” போன்ற பொருட்கள் இருக்ககூடாது, வேறேதும் இருக்க வேண்டும் அவை ஆயிரம் வருடங்களுக்கு மேல் எல்லா இயற்கை சீற்றங்களையும் தாங்கி நிற்க வேண்டும் என்ன செய்யலாம் யோசிக்கிறார், உடனே செயற்கையாக உருவாக்கப்படுகிறது மணற் பாறைகள், இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட மணலை கொண்டு வந்து குவிக்கிறார்கள் ஒரு புதிய கலவையின் மூலமாக மணலை பாறையாக மாற்றுகிறார்கள், இன்று வரை தொல்லியல் துறையால் இந்த கலவை என்ன என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை, திணறுகிறார்கள், அதனால் இதை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் விழிபிதுங்கி காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார்கள். கோயில் மழையிலும் வெயிலிலும் கரைந்து கொண்டே வரும் சுவடுகள் தெரிகின்றது,

ஓவியங்கள் தீட்ட காய்கறிகளும், மூலிகைகளும் வந்து நிரம்பிகிறது இன்னன்னவற்றை இவ்வளவு அளவு கலந்தால் இந்த நிறம் கிடைக்கும், என்பதை கண்டுபிடித்து வண்ணங்கள் தயாராகிறது, அஜந்தா ஓவியங்களுக்கு இணையாக ஓவியங்கள் தீட்டப்படுகின்றது. இந்தியாவிலேயே இந்த கோயிலில் மட்டும் தான்.

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top