பண்டாரவன்னியன்

 
295387_618238941538938_2032301817_nபண்டாரவன்னியன்
வன்னி இராசதானியின் இறுதி மன்னர் பண்டாரவன்னியன் இறுதிவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டார். ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது. முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள் நினைவுகூரப்பட்டது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று இருக்கிறது. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டார்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினார். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தார். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தார். பண்டார வன்னியனின் ஒரே சகோதரி நல்ல நாச்சாளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவர் மீது காதல் வந்தது மன்னனாக காக்கை வன்னியன் பண்டார வன்னியனின் சகோதரியை மணம் புரிய ஆசைப்பட்டார். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் வன்னிநிலப்பரப்பில் பண்டாரவன்னியன் திறை செலுத்தமறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமல் வெள்ளையர்கள் புறமுதுகு காட்டி பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்ந்து பண்டார வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறார். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை உணர்ந்து திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறார். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க்கவேண்டாமென்ற ஆலோசனை கூறியதைமீறி மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் காக்கைவன்னியனை பண்டார வன்னியன் சேர்த்துக்கொள்கிறார். ஆனால் காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டிசுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் பண்டார வன்னியனை தந்திரமாக காக்கை வன்னியன் அகப்படதாக கூறப்படுகிறது.இன்றும் நம்ப வைத்து ஏமாற்றுவர்களை காக்கை வன்னியன் பரம்பரையோ என்று கேட்கும் வழக்கம் இருக்கிறது.

About The Author

Number of Entries : 202

Leave a Comment

You must be logged in to post a comment.

Scroll to top